நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வேன்: கமல்ஹாசன்

நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல் பார்த்துக்கொள்வேன்: கமல்ஹாசன்

“இதுவரை நான் மத உணர்வு இல்லாமல் இருந்தது பற்றி கேட்கப்படுகிறது. நான் யானையாக இருந்தால் கூட மதம் பிடிக்காமல்தான் பார்த்துக்கொள்வேன். இப்போது வயது கூட கூட ஞானமும் அறிவும் அனுபவமும் கூடுகிறது. அறிவு கூடும்போது அதை பகுத்தறியும் உணர்வும் கூடுகிறது.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

“நான் களத்தூர் கண்ணம்மா படத்தில் நடித்தபோது சொன்னதை சொல்லும் கிளிப்பிள்ளையாக இருந்தேன். வளர்ந்ததும் காதல் மன்னன் பட்டம் கொடுக்கப்பட்டது. காதல் எல்லோருக்கும் வரும். அதிலும் கொஞ்சம் வாழ்ந்து பார்த்து விட்டேன். ‘களமிறங்கும் கமல்’ என்பது இப்போதைய எனது குரல். இது மக்களின் குரல்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர கலைவிழாவில் ஒரு அங்கமாக நடிகர் கமல்ஹாசனிடம் நடிகர் விவேக் பேட்டி காணும் நிகழ்வும் இடம்பெற்றது. அதன்போதே, கமல்ஹாசன் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “டுவிட்டரில் நான் கருத்துகள் பதிவிடும்போது பயன்படுத்தும் தமிழ் பற்றி பேசப்படுகிறது. சிறு குழந்தைகள் தங்களுக்குள் சமிக்ஞை மொழியில் கானா பாஷையில் பேசுவது உண்டு. உடனே புரிந்து கொள்ளக்கூடாது என்ற யுக்திதான் அது. சில வார்த்தைகளை பொத்தாம் பொதுவாக சொல்லும்போது கெட்ட வார்த்தைபோல் தோன்றும். அதை தவிர்க்கவே டுவிட்டரில் நல்ல தமிழை பயன்படுத்துகிறேன். அது சிலருக்கு புரியாமல் போகலாம். அதுவும் நல்லதுதான்.

தேவை என்பது மனிதனுக்கு எல்லை இல்லாத விஷயம். இதுபோதும் என்ற முடிவுக்கு வந்து விட்டாலே ஞானம் வந்து விட்டதாக அர்த்தம். எனக்கு ரசிகர்களின் கரகோஷம் மட்டும் தேவை என்பது தெரிகிறது. அதற்கான தகுதிகள் என்ன என்பதையும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

நான், சிறுவயதில் கலைஞர் வசனத்தை போட்டி போட்டு பேசுவேன். அப்படி வளர்ந்து ‘தேவர் மகன்’ படத்தில் நான் எழுதிய வசனத்தை சிவாஜி கணேசன் பேசினார். இதை விட பெருமை என்ன இருக்க முடியும். இப்போது நான் தொடங்கி உள்ள பயணம் (அரசியல்) என்னால் விரும்பி ஏற்றுக்கொண்டது அல்ல.

கணுக்கால் கூட நனைக்க கூடாது என்றுதான் ஒதுங்கி இருந்தேன். 2015இல் கட்டுப்பாடு இல்லாத வெள்ளம் எப்படி வந்ததோ அதுபோல் எங்களை இந்த சமூக அவலம் தாக்கிக்கொண்டு இருக்கிறது. நாங்கள் இருக்கும் இடத்தில்தான் இருந்து கொண்டு இருக்கிறோம். கழுத்தளவுக்கு அசிங்கமான விஷயங்கள் எங்களை சூழ்ந்து விட்டன.

அதில் இருந்து மேம்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் இறங்கி இருக்கிறோம். இது தனி மனிதன் செயலாக இருக்க முடியாது. தமிழர்கள் அனைவரும் சேர்ந்து செய்ய வேண்டும். உலகத்தின் மையம் ரசிகர்கள்தான். நீங்கள் தேட வேண்டியது தலைமையை அல்ல. திறமையை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.” என்றுள்ளார்.

source : 4tamilmedia.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *