விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன்: கமல்ஹாசன்

விரைவில் கட்சியின் பெயரை அறிவிப்பேன்:  கமல்ஹாசன்

கட்சியின் பெயர் மற்றும் தேர்தல் வாக்குறுதிகள் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடவுள்ளதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

ஆங்கில தொலைக்காட்சியான டைம்ஸ் நவ்க்கு அளித்தப் பேட்டியில் இந்திய அளவிலான அரசியல் குறித்த தமது கருத்தை முன்வைத்து கமல் பேசினார். தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் அரசியலில் தாம் ஒரு கூர்மையான கருவியாக மாறுவதற்கு முயன்று வருவதாக அப்போது அவர் குறிப்பிட்டார். அரசியல்வாதிகள் மட்டுமின்றி, மக்கள் மத்தியிலும் ஊழல் புரையோடி போயிருப்பதாகவும், அதை ஒழிக்க அனைவரும் ஒன்றுசேர வேண்டிய தருணம் வந்து விட்டதாகவும் அழைப்பு விடுத்தார்.

நாட்டின் எதிர்காலம் குறித்து அனைவரும் கனவு மட்டுமே காண்பதாகவும், அதை செயல்படுத்துவதற்கு யாரும் நேரம் ஒதுக்குவது இல்லை என்று ஆதங்கப்பட்ட கமல்ஹாசன், தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் சேவையாற்ற விரும்புவதாகவும் கூறினார்.

ட்விட்டரில் பதிவிடுவதோடு, சமூக அக்கறையை நிறுத்திக் கொள்ளும் கமல்ஹாசன் களத்தில் இறங்கி பணியாற்றுவதில்லையே என்ற குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு, தமது சமூக அக்கறைக்கான முன்னெடுப்பு தற்போது செயலாக மாறி வருவதாக தெரிவித்தார். இதற்காகவே மையம் என்ற செயலியை ஆரம்பித்தாகவும், அந்த செயலி மக்களுக்கு ஆயுதமாக பயன்படக்கூடும் என்றும் பதில் அளித்தார். மக்கள் மத்தியில் தான் ஒரு சிறந்த அரசியல்வாதியாக உருவாகாத வரை, அரசியல் கட்சியை தொடங்குவதோ, அதற்கான பெயரை அறிவிப்பதோ சரியாக இருக்காது என தெரிவித்த கமல், அந்தத் தகுதியை தாம் பெற்றதும் கட்சியின் பெயரையும், தேர்தல் வாக்குறுதிகளையும் அறிவிப்பதாக குறிப்பிட்டார். பாரதிய ஜனதா, காங்கிரஸ் இவற்றில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்க முன்வருவீர்கள் என கேட்டதற்கு, அரசியலில் தீண்டாமை என்பது கிடையாது என்றும் தமிழகத்துக்கு நன்மை செய்ய முன் வரும் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

அரசியலில் உறவுக்காரர்கள் என டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் தெரிவித்தது சரிதான் என தெரிவித்த கமல்ஹாசன், கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுடனும், பிரதமர் மோடியுடனும் பழகுவதில் தமக்கு எந்த நெருடலும் இல்லை என்றும் கூறினார். பாரதிய ஜனதாவுடன் நெருக்கமான உறவு வைத்துள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் தீவிரமான ரசிகன் என்றும் அதை மறைக்க வேண்டிய அவசியம் தமக்கு இல்லை என்றும் கமல்ஹாசன் தெரிவித்தார்.

 

வீடியோ

puthiyathalaimurai.com

Comments

comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *